Pages

Monday, 7 May 2012

சாதிவாரி கணக்கெடுப்பில்


இந்திய அரசமைப்பின் சட்டப்பிரிவு 340ல் பிற்படுத்தப்ட்டவர்களின் சமூக கல்வி நிலையை ஆராய குழு ஒன்று அமைக்கப்பட்டு அவர்களின் முன்னேற்றத்திற்கன இடர்ப்பாடுகள் நீக்கப்படவேண்டும் என அம்பேத்கர் கூறியிருந்தாலும் (குறிப்பு: நேரு அமைச்சரவையிலிருந்து சட்ட அமைச்சர் பதவியைவிட்டு விலகுவதற்கு அம்பேத்கர் கூறிய 10 காரணங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கென குழு நியமிக்கப்படவில்லை என்பதும் ஒன்று) விடுதலைப்பெற்ற இந்தியாவில் காங்கிரசு அல்லாத மொரர்ஜி தேசாய் அமைச்சரவைதான் பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை ஆராய மண்டல் அவர்களின் தலைமையில் குழுவை நியமித்தது. (நேரு காலத்தில் அமைக்கப்பட்ட காகா கலேல்கர் குழு ஒரு கண்துடைப்புக் குழு என்பதை அறியவேண்டும்)
பின்னர் பல அரசியல் கட்சிகள் சமூக அமைப்புக்களின் போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரசு அல்லாத பிரதமர் வி.பி.சிங் அவர்கள் தனது முதன்மை அமைச்சர் பதவியைத் துறந்து 1988ல் அப்பரிந்துரைகளில் ஒரு சிலவற்றை மட்டும் நடைமுறைப்படுத்த ஆணையிட்டார். 1993ல் பல இடர்ப்படுகளுக்கு இடையில் உச்ச நீதிமன்றத்தீர்ப்பின்படி அது முறையாக நடைமுறைக்கு வந்தது. 


முதலில் இதை கடுமையாக எதிர்த்த பா.ஜ.கவும், மறைமுகமாக எதிர்த்த காங்கிரசு உள்ளிட்ட பொதுவுடமை இயக்கங்களும் மக்கள்தொகையில் மிகப் பெரும்பான்மையுள்ள பிற்படுத்தப்பட்டவர்களின் வாக்குகளை இழந்துவிட விரும்பாமல் வேறு வழியின்றி பின்னர் ஆதரவு தெரிவித்ததோடு இல்லாமல் அர்ஜுன்சிங் அவர்கள் மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சராக 2008ல் இருந்தபோது மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டிற்கு ஆணை பிறப்பித்தது (இன்றுவரை இது நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது வேறு செய்தி). 
இதை எதிர்த்தும், தமிழகத்தில் 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்தும் ஒவ்வோர் ஆண்டும் உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் போடப்படுகின்றன, விசாரணைக்கு வருகின்றன. அப்போதெல்லாம் சமூகரீதியாக, கல்விரீதியாக உண்மையிலேயே பிற்படுத்தப்பட்ட சாதிகள் என்னென்ன, அவற்றின் மக்கள் தொகை கணக்கு என்னென்ன என்பதற்கான முறையான சான்றுகளை அல்லது எடுக்கப்பட்ட கணக்குகளை தருமாறு உச்சநீதிமன்றம் கேட்கும்போதெல்லாம் மத்திய அரசு 1931 ஆம் ஆண்டின் கணக்கையும், மண்டல் குழு குறிப்பிட்ட மாவட்டங்களில் எடுத்த மாதிரி கணக்கெடுப்பையும், சில அரசு அமைப்புகளான National Family Health Statistics 1998 - 29.8%, National Sample Survey 1999-2000-36% எடுத்த கணக்கையும் சான்றாக அளித்தது; மேலும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இருப்பதைப் போல பிற்படுத்தப்பட்டவர்களுக்கான முறையான சாதி அட்டவணை இதுவரை தயாரிக்கப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. 
தாழ்த்தப்பட்டவர்களுக்கும், மலைவாழ் பழங்குடியினருக்குமான இடஒதுக்கீட்டிற்கு முறையாக வழிவகை செய்ய அவர்களின் சாதிப்பட்டியல் 1935ஆம் ஆண்டின் இந்திய அரசின் சட்டத்தின்படி அட்டவணைப்படுத்தப்பட்டு அவ்வட்டவணையில் உள்ள சாதிகள் இவ்வளவு என வரையறுக்கப்பட்டு அவர்களின் மக்கள் தொகையும் 1931ஆம் ஆண்டின் மக்கள் தொகையை வைத்து கணக்கிடப்பட்டு தாழ்த்தப்பட்டவர்களுக்கு (மத்திய அரசில்) 15 சதவீதமும், பழங்குடி மலைவாழ் மக்களுக்கு 7.5 சதவீதமும் வழங்கப்பட்டுவருகிறது இந்திய விடுதலைக்குப்பிறகு அரசமைப்பு சட்ட 341, 342 விதிகளின்படி இதற்கு முறையான ஒப்புதல் வழங்கப்பட்டது ஆகவே இதில் இதுவரை எந்த சிக்கலும் எழவில்லை. 
 ஒவ்வோர் ஆண்டும் பிற்படுத்தப்பட்டவர்களின் இடஒதுக்கீட்டில் எழும் இச்சிக்கலை தீர்க்க உச்சநீதி மன்றமே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த அரசுக்கு இறுதியாக ஆலோசனை கூறியது. அதன் அடிப்படையிலேயே மத்திய அரசின் அமைச்சரவை 19.5.2011 அன்று இம்மாதிரியான கணக்கெடுப்பை நடத்த ஒப்புக்கொண்டது. இதற்கு முலாயம் சிங், லல்லு பிரசாத், மருத்துவர் இராமதாசு, வே.ஆணைமுத்து ஆகியோர் முயற்சி பாராட்டத்தக்கது. இக்கணக்கெடுப்பில் மக்கள் சொல்லும் சாதியை வைத்து அவர்கள் இதர பிற்படுத்தப்பட்டவர்களா என்பதை வரிசைப்படுத்த இயலும். ஏனெனில் ஒவ்வோர் மாநிலத்திலும் எந்தெந்த சாதி ஓபிசி பட்டியலில் இருக்கிறது என்பதற்கு இதற்கென உள்ள தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் பட்டியலை வெளியிட்டுள்ளது. (ஒரு தகவல் - தமிழகத்தில் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்). 
ஆக கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை முறைப்படுத்த எடுக்கப்படும் இக்கணக்கெடுப்பை சாதி சங்கங்கள் தங்களது சாதி பலத்தைக் காட்டவும், சாதிப் பெருமை பேசவும் அறிக்கை விட்டுக்கொண்டு உள்ளனர்; சுவரொட்டிகள் அடித்து ஒட்டுகின்றனர். இதில் குறிப்பாக வன்னியர்கள் எனப்படும் சிலர் தங்களை வன்னியகுல ஷத்திரியர்கள் என சொல்ல வேண்டும் என்றும் தாங்கள் மட்டுமே தமிழ்நாட்டில் ஷத்திரியர்கள் என்றும் சுவரொட்டியில் தெரிவித்து உள்ளனர். இதற்கு ஆதாராமாக 1923ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் வெளிவந்த அரசாணையையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர். வர்ணாசிரமத்தின்படி தென்னிந்தியாவில் அதுவும் குறிப்பாக தமிழகத்தில் பிராமணர், ஷத்திரியர், வைசியர், சூத்திரர் என்ற நான்கு பாகுபாடுகள் நிலவவில்லை. பிராமணர், சூத்திரர் என்ற இரண்டு மட்டுமே நிலவியது என அம்பேத்கர் உள்ளிட்ட பலரல் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அந்த நிலையில் இவர்கள் க்ஷத்திரியர்கள் தங்கள்தான் என புதுக்கரடி விடுகிறார்கள். அதுமட்டுமல்லாமல் வர்ணாசிரமத்தில் இரண்டாவது அடுக்கில் அதாவது பிராமணனுக்கு அடுத்த இடத்தில் இடம் பிடிக்கத் துடித்து எப்படியாவது தாங்கள் பிராமணனுக்கு கீழ்தான் என்பதை எழுதிக்கொடுக்கத் தயாரக இருப்பது வெட்கக்கேடானது.


இவர்கள் ஷத்திரியர்கள் எனக்கூற நினைப்பதே தமக்கு மேலே எந்த சாதி இருந்தாலும் பரவாயில்லை தமக்கு கீழே மற்ற சாதியினர் இருக்கிறார்கள் என்ற சாதிப் பெருமைதான். இதில் என்ன கூத்து என்றால் ஷத்திரியர்கள் என தம்மை இவர்கள் அழைத்துக்கொள்வதே தவறு என “வன்னிய சிற்றரசர்கள்” என்ற நூலில் “புலவர் முத்து எத்திரசான்” கூறுகிறார். அந்நூலின் கத்திரியர்(ஷத்திரியர்) என்ற தலைப்பில் அவர் கூறும்போது கண்டம்(சிறு கத்தி) உடையவர்கள் கண்டர் (தற்போது வன்னியர்கள் தங்களின் சாதிப்பெயராக கண்டர் என போட்டுக்கொள்கிறார்கள்) கத்தி உடையவர்கள் கத்திரியர் என ஆனார்கள் எனக் குறிப்பிட்டு, இச் சொல்லே அரசர்களை குறிக்கப் பயன்பட்டு வந்ததாகவும் காலப்போக்கில் வடமொழியாளர்களால் “க” விற்குப் பதில் “க்ஷ” என்ற எழுத்தை இட்டு க்ஷத்திரியர்கள் என வழங்கி வருகிறதாகவும் கூறியுள்ளார்.
ஆகவே வர்ணாசிரம க்ஷத்திரியர்கள் வேறு இவர்கள் வேறு என்பதைப் பிரித்துப் பார்க்கத் தெரியாமல் சாதிப் பெருமையை பேசிக்கொள்ளும் இவர்கள் ரிக் வேதத்தில் புருஷ சுக்தத்தில் (10:90) க்ஷத்திரியன் தோளில் இருந்து பிறந்தவன் என்று கூறப்பட்டுள்ளதையும் அவர்கள் அரசர்களாகவும் வீரர்களாகவும் படைக்கப்பட்டார்கள் என்பதையும் பிடித்துக் கொண்டு க்ஷத்திரியர்கள் எனக்கூறிக்கொள்வதில் பெருமை கொள்ளலாம். ஆனால் தமிழகத்தில் அதுபோல இல்லை. பிராமணர்களுக்கு கீழ் நிலையிலேயே அனைவரும் வைக்கப்பட்டனர். அதனாலேயே 20 ஆம் நூற்றாண்டில் தொடக்கத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கம் கொட்டமடித்தது. ஆண்ட பரம்பரையினர் என்று சொல்லிக்கொண்டவர்கள் எல்லாம் கையெழுத்து போடக்கூடத்தெரியாதவர்களாக அடிமை வேலை செய்பவர்களாக, சாதியில் கீழானவர்களாக வைக்கப்பட்டு இருந்தனர். 
 பகவத் கீதையின் 18 ஆம் சருக்கம் உள்ளிட்ட பல சருக்கங்கள் சாதியின் மேல் கீழ் பிரிவினையை உறுதிப்படுத்துகின்றன. ஆனால் இதே சாதித் தத்துவத்தை மேல்-கீழ் தத்துவத்தைப் போதித்து அதை நிலைபெறச் செய்த கிருஷ்ணனை தமது கடவுளாகப் போற்றி தாங்கள் அடிமைதான் என பழம் பெருமை பீற்றிக்கொள்கிறது யாதவர் என்ற சாதி. இவர்களும் தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் என அறிவிக்கக்கோரி உண்ணாவிரதம் இருந்தனர். கடவுள் பரம்பரையினரின் நிலை இப்படி ஆனதற்குக் காரணமே பார்ப்பனீய வர்ணாசிரமம்தான் என்பதை உணர மறுக்கின்றனர் அச்சாதியினர். அதைப் போலவே ஆண்ட பரம்பரையினர் எனக் கூறிக்கொள்ளும் பார்கவ குலத்தினரும் இதே கோரிக்கையை வைத்து சாதிப்பெருமை பேசி மாநாடு நடத்தினர் சமீபத்தில். இவர்கள் கூறுகிறார்கள் தாங்கள் சோழர்கள் என்றும் இராஜராஜனின் வழித்தோன்றல்கள் என்றும் கூறி வர்ணாசிரமத்தால் காயடிக்கப்பட்டதை மறந்து பெருமை பேசித் திரிகின்றனர் ஆனால் மிகவும் பிற்படுத்தப்பட்டவராக அறிவிக்கத் தவறாமல் கோரிக்கை வைக்கின்றனர். 
ஆக பெரியார் போன்றவர்கள் கடுமையாக உழைத்தும் இந்த சாதிச் சங்கங்கள் வர்ணாசிரம கட்டுக்குள் இருந்து வெளிவராமல் ஆண்ட பரம்பரையினர் என சாதிப் பராக்கிரமம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். தங்களுக்குள் இணையாகக்கூட நெருங்கி வரத் தயங்குகிறார்கள். வேலை வாய்ப்புகளில், கல்வியில் பார்ப்பன ஆதிக்கம் இருக்கக்கூடாது என நினைக்கின்றனர்; கிராமங்களில் தனக்குக்கீழே உள்ள தலித்துக்களை மிதிக்கின்றனர். வாழ்வியலில் சமத்துவத்துக்கு எதிரான வர்ணாசிரம சடங்குகளையும் பார்ப்பனீயத்தையும் கைவிட இவர்கள் தயாராக இல்லை. ஆனால் உண்மை நிலை என்னவென்றால் இந்த ஆண்ட பரம்பரையினர் ஒவ்வொரு கூட்டத்திலும், தங்களுடைய மாநாடுகளிலும் அரசு பதவிகளில் தங்களுக்கு சரியான பிரதிநிதித்துவம் இல்லையென்று புள்ளிவிவரங்கள் கூறி தங்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினராக ஆக்க வேண்டும் என கோரிக்கை வைத்து புலம்புவது மிகவும் வேடிக்கை. 
தற்போது செய்திக்கு வருவோம். தமிழகத்தில் சாதிகளுக்கு நாயுடு, நாய்க்கர் (வன்னியர்), முதலியார், பிள்ளை, செட்டியார் போன்ற பல பெயர்கள் உள்ளன. ஆனால் தமிழக அரசின் பட்டியலின்படி இதுபோன்ற சாதிகள் தமிழகத்தில் இல்லை. ஏனென்றால் இவையெல்லாம் சாதிப் பெருமை பேசும் பட்டங்களே ஆகும். சாதிச் சான்றிதழ் பெறும்போது இவை சிக்கல்களை உருவாக்குகின்றன. ஆகவே பெருமை பேசிக்கொள்வதற்காக சாதிப்பட்டங்களை போட்டுக்கொள்ளாமல் அரசு பட்டியலில் உள்ளபடி இச் சாதிவாரி கணக்கெடுப்பில் தங்களது சாதிகளைக் கூறினால். எந்த நோக்கத்திற்காக இக்கணக்கெடுப்பு நடத்தப்படுகிறதோ அது நிறைவேற வாய்ப்புகள் உள்ளது. இல்லையென்றால் பெருங்குழப்பத்தையே இவை உருவாக்கும்.


இக்கணக்கெடுப்பு நடத்த கோரிக்கை வந்தபோதே இச்சாதிகள் அதுவும் குறிப்பாக ஆதிக்க சாதிகள் பெரும்பான்மை, பழம்பெருமை பேசுமே என்ற வாதம் வந்தது, இக்கணக்கெடுப்பு நடத்தப்படாவிட்டலும் இவர்கள் காற்றில் அட்டைக் கத்தியை சுற்றிக்கொண்டுதான் இருப்பார்கள். இருந்தாலும் அரசின் திட்டங்களும், வேலைவாய்ப்பு, கல்வி உரிமைகளும் முறையாக திட்டமிடப்பட, ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்கு என உழைக்கும் இயக்கங்களுக்கு அரசை நிர்ப்பந்திக்க இவ்விவரங்கள் தேவைப்படுவதால் இக்கணக்கெடுப்பு சரியாக அமைந்திடல் வேண்டும். சாதிச் சங்கங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கேற்ப செயல்பட வேண்டும்.

No comments:

Post a Comment