Pages

Monday, 7 May 2012

இளையராஜா. ராஜா ராஜா தான்.


இளையராஜா என்னும் இசையமைப்பாளரை யாருக்கு தான் தெரியாது...? இளையராஜா.. இசைஞானி, ராகததேவன், மேஸ்ட்ரோ, இசை இளையராஜா. இதெல்லாமும் அவருக்கு வழங்கப்பட்ட பட்டங்கள். அவரது இசையை அனுபவித்து வளர்ந்தவன் நான். எனக்கு என்றும் மாறாத மரியாதைக்குரிய விஷயங்களில் பிரதானமான இடம் இளையராஜாவுக்கு உண்டு. எனக்கும் இளையராஜாவுக்கும் எந்த நேரடி அறிமுகங்களும் இல்லை என்றாலும் என்னை சமைத்த ஆளுமைகளில் தலையான தனிமையான என்னைத் தன் வயப்படுத்தி வைத்திருந்த ஆளுமை இளையராஜா.

illaiyarajaஇந்த கட்டுரை இளையராஜாவின் இசைத்திறன் பற்றியது அல்ல. என் இளையராஜா. இளையராஜாவின் நான். அவ்வளவு தான். என் சுயசரிதையின் தொடக்கமாகக் கூட எனது பால்யத்தை கொள்வதே நியாயம். அந்த வகையிலும், எனது பால்யம் என்பதும் (1977-1990) எனது வாலிபம் (91-2000) என்பதும் எனது தற்காலம் என்பதும் 2000த்திலிருந்து இன்று வரை...இளையராஜாவின் எழுச்சி, இளையராஜாவின் ஆட்சி இளையராஜாவின் தனிமை என மூன்று காலங்களாக பிரித்துப்பார்க்க முடியும் என்பது ஆச்சர்யமற்றது. இளையராஜா, காலத்தைக் கட்டிய நாயகன் என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்காது.



1986-87 வாக்கில் நாங்கள் அப்பொழுது மதுரை கோ.புதூரில் வசித்துக்கொண்டிருந்தோம். ஈ.எம்.ஜி நகர் என்ற குடியிருப்பு பிரதேசம். அந்த சூழலில் எனக்கு 10 வயது தான். இளையராஜாவின் பிரபல பாடல்களை கேட்டே வளர்ந்தேன். எனக்கிருக்கும் ஒரே சகோதரி உமா, அப்பொழுது அந்த பகுதி பொங்கல் விழாவில் இளையராஜாவின் "ஊரு சனம் தூங்கிருச்சு" (மெல்ல திறந்தது கதவு) என்ற பாடலை பாடி முதல் பரிசு பெற்ற பாட்டுப்போட்டியை எங்களால் மறக்கவே முடியாது. கருத்தொற்றுமை இல்லாத தீவுகளாய் சிதறியிருந்த எனது சித்தப்பாக்கள், மாமாக்கள் அனைவருக்கும் பொதுவான நம்பிக்கை என் அக்காள் மிக நன்றாகப் பாடுவாள் என்பதாக இருந்தது. அவளும் நன்றாகவே பாடுவாள்.

ஒரு முறை எனது ஒரே தாய்மாமன் (அவர் என்னை பொருத்தவரை ஒரு அன்னியன்.) அவர் நிகழ்ச்சி ஒன்றில் குடும்பங்களுக்கிடையில் நிகழ்ந்த மனஸ்தாபங்களுக்கு பின்னதாய் எழுந்த மிக நீண்ட அமைதியொன்றைக் கலைக்க உதவியவர் இளையராஜா. அவரது மணியோசை கேட்டு எழுந்து....(பயணங்கள் முடிவதில்லை) என்ற பாடலை என் அக்காளை பாட சொல்லி என் தாய் மாமன் கேட்க.. அவள் பாட, அவர் பாராட்ட,நல்லவேளை சகஜமானது சூழல். இல்லையேல் அன்றைக்கு உலகப்போர் மூண்டிருக்க வேண்டியது.

என் தந்தை எனக்கு தெரிய அவர் வயது இன்றைக்கு இருந்தால் 73. காலமாகிவிட்ட அவர் அடிக்கடி பாடுவது அல்லது முணுமுணுப்பது சில பழைய பாடல்களை.
1.நீலவண்ணக் கண்ணா வாடா.
2.நான் பெற்ற செல்வம்...நலமான செல்வம்.
அவ்வளவுதான் நினைவிருக்கிறது. ஆனால் அவர் அந்திமக்காலங்களில் அப்பொழுது சாடிலைட் டி.வி. அறிமுகமான பொழுது 1994-96. அவர் அடிக்கடி கேட்ட பாடல், அதை யார் பாடினாலும் விரும்பிக் கேட்பார். ஒரே ஒரு பாடல். வனக்குயிலே குயில் தரும் இசையே..(ப்ரியங்கா) இந்தப் பாடலை அவர் எந்த அளவுக்கு விரும்பினார் என்பதை வேறெந்த பாட்டையுமே அவர் விரும்பியதில்லை என்ற அளவிலேயே புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைக்கும் என் தந்தை குறித்த நினைவுகளை எனக்கும் எனது குடும்பத்தினருக்கும் இந்த பாடலளவுக்கு வேறெந்த விஷயமுமே ஏற்படுத்திவிடுவதில்லை அவ்வளவு உடனடியாக.

பள்ளி இறுதி நாட்களில் நான் ரஜினிகாந்த் ரசிகனாயிருந்தேன். அவர் நடித்த தளபதி திரைப்படம் 1991 தீபாவளிக்கு வெளியானது. மதுரையில் இரண்டு திரை அரங்கங்களில் வெளியானது. அப்பொழுது இரண்டில் தான் வெளியாகும். இன்றைக்கு திருட்டு டிவிடிக்கு பயந்து 7 அல்லது 8 அரங்குகளில் வெளியாகின்றது. எந்திரன் 18 தியேட்டர்கள். அன்றைக்கு அப்படி இல்லை.  இரண்டு தான். 100 நாள் ஓடியே தீரும் ரஜினி படங்கள். ஆனால் தளபதிக்கு முன்னால் மிகச் சமீபமான காந்தி ஜெயந்தி அன்று நாட்டுக்கு ஒரு நல்லவன் என்னும் படம் வந்து இருந்தது. மரண அடி வாங்கிய படம். குழந்தைத்தனமான ரஜினி படமும் கூட. விளைவு என்னை போன்ற ரசிகர்களால் நிராகரிக்கப்பட்டிருந்தது. அதன் உடனடி அடுத்த படமாக தளபதி வந்தது.

அப்பொழுது நான் 10 ஆம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். இல்லை இல்லை. பள்ளிக்கு போய் வருவேன் அவ்வளவு தான். அந்த நேரம் படிப்பென்றால் எட்டிக்காயாய் கசந்தது. அது என்றைக்குமே இனிக்கவில்லை அது வேறு விஷயம். அந்த நேரம் எனக்கு பெரிய அரங்கமான மதுரை சரஸ்வதிக்கு எப்படி செல்வது என வழி தெரியாது. வீடு வேறு நகரத்தின் வெளியே ஒதுக்குப்புறமான திருநகருக்கு மாற்றப்பட்டிருந்தது. அதனால் சின்ன அரங்கமான எனது பள்ளிக்கு அருகாமையில் இருக்க கூடிய அம்பிகைக்கு சென்றேன்.
அரங்க வாயிலில் 3 சீட்டு ஆடிக்கொண்டிருந்த சில நல்லவர்களை நம்பி இருந்த பணத்தில் பெரும் பகுதியை தொலைத்து விட்டு மிச்ச சொச்சத்தில் ஒருவழியாக தலைவனைப் பார்த்தேன். அன்று வகுப்பை கட் அடித்திருந்தேன் வழக்கம் போல. மறுநாள், பள்ளிக்கு சென்றால், எனது வகுப்பாசிரியர் அதே ஷோவுக்கு வந்திருந்ததை நான் தலைவன் மயக்கத்தில் கண்டுகொள்ளவேயில்லை. ஆனால் அவர் அங்கேயும் என்னைக் கண்டு கொண்டவர் மறுதினம் வகுப்பில் அனைவர் முன்னிலையிலும் என்னை கண்டுகொண்டார் மிகச் சிறப்பாக.

அடி வாங்கி அழுதபடியே வந்தவன் ஒரு டீ கடையில் முட்டை போண்டா (அப்பொழுது 150 காசுகள்) வாங்கி தின்னபடியே அழுது கொண்டிருந்தேன். அந்த நேரம் என்னை எனது அழுகையிலிருந்து மீட்டெடுத்தவர் இளையராஜா. அந்த நேரத்தில் டேப் ரெக்கார்டரில் ஒலித்த ராக்கம்மா கையை தட்டு என்ற பாடலை கேட்டு தளபதி படத்தை பற்றி அந்த வடை மாஸ்டர் அவர் எனக்கு அப்பொழுது மிக நெருக்கம். அவர் என்னை விசாரிக்க அவரிடம் அழுகையை நிறுத்தி விட்டு உடனடி உற்சாகனாய் நான் தளபதி படத்தின் அருமை பெருமைகளை நான் சொல்ல துவங்க அதன் பின் கேட்கவா வேண்டும்..?

எனது கவனம் ரஜினி என்பதிலிருந்து எனது 17 ஆவது வயதில் முழுக்க முழுக்க இளையராஜா மீது திரும்பலானது. அதற்கு காரணம் ரஜினி அல்ல. ஆனால் காதுகளை ஊடுருவி இதயத்தை மயங்க வைத்த மருத்துனாய் இளையராஜா எனக்கும் என் சுற்றத்துக்கும் இருந்தார்.என் குருதிவழிகளை சுத்தப் படுத்தினார்.என் மனசைக் கழுவிக் கோலமிட்டார். என்னை முழுக்க ஆக்ரமித்தார்.

பனி விழும் மலர் வனம் என்னும் இளையராஜாவின் (நினைவெல்லாம் நித்யா) பாடலை என் வாழ்வில் நான் ரசிக்கும் பாடல் நம்பர் 1 எனச் சொல்ல துவங்கி இருந்தேன். அதற்கு ஒரு காரணம், பாலகுமாரன் தனது இரும்புக் குதிரைகளில் அந்த பாடலை வரி வரியாக பயன்படுத்தி இரண்டு பாத்திரங்களின் மனோநிலைகளை எடுத்து வைத்திருப்பார். அந்த பாடலின் மீது அன்று கொண்ட பைத்தியம் இன்றுவரை தொடர்கிறது. ஆக சிறந்த பாடல்களான மூடுபனி (என் இனிய பொன் நிலாவே), ரெட்டை வால் குருவி (ராஜ ராஜ சோழன் நான்), புன்னகை மன்னன் (என்ன சத்தம் இந்த நேரம்), ஆட்டோ ராஜா (சங்கத்தில் பாடாத கவிதை) (மலரே என்னென்ன கோலம்)ராஜா மகள் (பிள்ளை நிலா), மூன்றாம் பிறை (கண்ணே கலை மானே), ஸ்னோரீட்டா(ஜானி)

இந்த பாடல்களெல்லாம் பின்னால் அவற்றிற்கென தன்வரலாறு கொண்டவை. அந்த கால கட்டத்தில் இளையராஜா என் தலைவன் என்று சொல்லத் தொடங்கிய காலம். ஜாதிவெறி மாதிரி மதவெறி மாதிரி, இளையராஜா பற்றி கருத்து கேட்பேன். ஒருவர் அவரை பிடிக்கும் என்று விழி விரிந்தால் அவரை என் உறவாக பார்ப்பேன். இல்லை என்றால் சுட்டெரித்து விடுவேன். இளையராஜா என்னும்  ஆளுமை ஒரு வித்யாசமான, அதே நேரத்தில் நடிகர்களின் ரசிகர் கூட்டத்தை விட சற்று ரசனையில் உயர்ந்த (என்று நாங்களே நம்பிய) கூட்டமாக மாறுவது என்னையும் சேர்த்து பலருக்கும் பிடித்ததாகவே இருந்தது.

இன்றைக்கு தேடிப்பார்த்தாலும் காண்பதற்கு அரிதான விஷயங்களில் ஒன்று தான் கேசட் செண்டர்கள். அதாவது மதுரை நகர் மத்தியில் இருக்கும் கேசட் கடைகள் ஆடியோ மற்றும் வீடியோ கேசட்களை விற்பனை செய்யும்.. அதே நேரத்தில் நகருக்கு வெளியே குடியிருப்பு பகுதிகளான திருநகர் உள்ளிட்ட பகுதிகளில் ஆம்ப்ளிஃபையர் உள்ளிட்ட சாதனங்களை வைத்துக் கொண்டு விரும்பும் பாடல்களை விரும்பும் வரிசைகளில் பதிந்து தருவர். அப்படி ஒரு கடை தான் சுரேஷ் என்னும் நண்பரின் கடை.

சமீப வருங்காலத்தில் என்னென்ன மாற்றங்கள் வந்து எல்லா பழைய பொதுமைகளையும் விழுங்கக் காத்திருக்கிறது என்பதை கொஞ்சமும் அறியாமல் நாங்கள் இளையராஜாவின் பாடல்களை சுவாசித்து வாழ்ந்திருந்தோம். இன்றைக்கு இண்டெர்னெட்டில் இசை பொங்கி வழிகிறது. எங்கு பார்த்தாலும் எஃப்.எம் எனப்படும்
பண்பலை வானொலி. கைப்பேசியில் நினைவுத்தகடு எனப்படும் மெமரி கார்டுகளில் ப்ரத்யேகங்களில் ஒன்றாக இசை பெருகிக்கொண்டிருக்கிறது. ஐ-பாடு எனப்படும் சின்ன இசைப்பதிவுக்கருவியில் ஆயிரக்கணக்கான பாடல்களை அகர வரிசையில் சேமித்து விடலாம்.

ஆனால்.. அப்பொழுது வாக்மேன் என்னும் கை-இசை-ஒலி கருவி மிக விலை உயர்ந்தது, அந்த காலகட்டம் இளையராஜாவுக்கு சொந்தமாக இருந்தது. அவரும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத பேரரசனாக அந்த காலகட்டத்தை ஆளவே செய்தார். ஒரு கண்டக்டரும், மாணவனாகிய நானும், அகதி முகாமினை சேர்ந்த ஒரு தோழரும் மணிக்கணக்கில் திருநகர் 5வது பேருந்து நிறுத்தத்தில் நின்று பேசியபடியே இருப்போம். எங்களது பேச்சின் பொதுப்பொருள், அறிமுக காலகட்டத்திலிருந்து இளையராஜாவின் வளர்ச்சியும் அவரது இசையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்களும் இன்றைக்கு நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. நாங்கள் ஒவ்வொருவருமே ஒருவருக்கொருவர் சம்மந்தமே இல்லாதவர்கள். அதே போல என்னால் இன்றைக்கும் உறுதியாக சொல்ல முடியும், எங்களுக்கு இடையில் இருந்தது நட்பு அல்ல. ஒன்லி ராஜா. அவரை பற்றி விட்ட இடத்திலிருந்து பேசுவோம். கலைந்து சென்று விடுவோம். அவ்வளவு தான்.

அந்த நேரத்தில் திரு நகர் மையத்தில் இருக்ககூடிய அண்ணா பூங்காவுக்கு அருகில் இருக்க கூடிய கேஃப்டீரியா என்னும் காபி கடை. அதை நடத்தியவர் தீபக் என்னும் ஒருவர். தில்லி அடிக்கடி சென்றுவருபவர். அவர் என்னை விட ஒரு பத்து வயதுகள் மூத்தவராக இருப்பார். அவர் அந்த கடையை நடத்தியதே ஒரு அலாதியான விஷயம். அந்த கடை அன்றைய காலகட்டத்தில் மதுரை மாதிரியான ஒரு இரண்டாம் நிலை நகரத்தில் நிச்சயமாக ஒரு புதுமை தான்.

அலங்கரிக்கபட்ட சுற்றுசுவர்கள். தரையில் மென்மையான மணல். சின்ன சின்ன வட்ட மேசைகள். ஒவ்வொரு வட்டத்திற்கும் குவியும் தனிப்பட்ட விளக்குகள்  என மிக அருமையான உள்ளமைப்பு கொண்டவை. அந்த நேரத்தில் மற்ற கடைகள் திணறும் அளவுக்கு ஒரு 8 சதுர கிலோமீட்டருக்கு தீபக்கை அடிக்க ஆளே இல்லை என்னும் நிலை. அவர் எதை கையாண்டாலும் விற்கும். அந்த நேரத்தில் 18லிருந்து 25 வரை வயதுடையவர்களுக்கு தீபக் கடை தான் கோயில். அங்கு வழக்கமாக கூடுவதை (டாப் அடிப்பது) ஒரு கௌரவமாக அந்த பகுதி இளைஞர்கள் கருதிவந்த நேரம் அது.

அந்த கடை என்னை வசீகரித்து கொண்டதற்கு மேற்சொன்ன எல்லா விஷயங்களைக் காட்டிலும் தலையாய காரணம், சொல்லவே தேவை இல்லை. இளையராஜா. தீபக் மென்மையான குரலுக்கு சொந்தகாரர். அவர் ராஜ் சீதாராம், சுரேந்தர், தீபன் சக்கரவர்த்தி, ஜென்சி, சசிரேகா என விதவிதமான குரல்களை எனக்கு தனித்து அறிய செய்தவர். இளையராஜாவின் சம வரிசையில் இயங்கின ஷ்யாம், சங்கர் கணேஷ், கங்கை அமரன், டி.ராஜேந்தர் ஆகிய ஆளுமைகளையும் கூட பட்டியலிடக் கூடியவர். தீபக் என்பவரை சந்தித்து இராவிட்டால் நான் அந்த காலகட்டத்துக்கு முந்தைய நல்ல பல பாடல்களை அறிய ரசிக்க மிகுந்த சிரமப்பட்டிருக்க நேர்ந்திருக்கும்.

தீபக் இன்றைக்கு தில்லியிலே குடியேறி விட்டார். அவரை பார்த்து சற்றேறக் குறைய 14 வருடங்கள் இருக்கும். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். அவர் எங்கே இருந்தாலும் அந்த சுற்றுப்புறத்தில் இளையராஜாவை ரசிக்க வைத்துக்கொண்டிருப்பார் யாரையாவது. அந்த கடைக்கு இரண்டு பேர் வருவார்கள். அவர்களின் பெயர் சிவாஜி மற்றும் கணேசன். இருவரும் சவுராஷ்ட்ரா இனத்தை சேர்ந்தவர்கள். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்று கிழமைகளில் மட்டும் தான் அந்த இரண்டு பேரையும் காண முடியும். வெவ்வேறு இடங்களை சேர்ந்த நண்பர்கள். அவர்கள் வேறு யாருடனும் பேச மாட்டார்கள். ஒரு டேபிளில் அமர்ந்து கிட்ட தட்ட 2 மணி நேரங்கள் அவர்களுக்குள்ளே கிசுகிசுத்த குரலில் பேசியபடியே இருப்பர். எழுந்து போய் விடுவர்.

ரொம்ப நாளாக நான் அவர்களை கவனித்த பிறகு தான் தெரியும். அவர்கள் இருவரும் இளையராஜாவின் மிகத்தீவிர ரசிகர்களென்பது. அது தெரிந்து விட்டால் போதாதா..? அப்புறம் ஒரே சங்கமம் தான். அதன் பின் தீபக் அந்த கடையை நடத்தி முடிக்கும் வரை இளையராஜாவுக்காகவே சொல்லிவைத்து சந்திப்போம். அவர்களின் இசை ஞானம் மிக துல்லியமானது. அப்பொழுது வெளியாகியிருந்த இன்னாத்தே சிந்த விஷயம் என்னும் மலையாள படத்தின் இசைக்கேசட் அவர்களிடம் இருந்து நான் பெற்றுக்கொண்டது எனக்கு பொறாமையையும் அதே நேரத்தில் சந்தோஷத்தையும் ஏற்படுத்தியது. அந்த திரைப்படத்தில் இளையராஜா இசையில் மதுபாலக்ருஷ்ணன் பாடிய மனசிலொரு பூமாலா என்னும் பாடல் அதன் பிறகு வெகுநாளைக்கு என் இதழ்களின் முணுமுணுப்பில் இருந்தது

.

ஓளங்கள் படத்தில் இளையராஜா தனது தமிழ்பாடலான சங்கத்தில் பாடாத கவிதை பாடலை "தும்பி வா தும்பக் குடத்தில்" என்ற மறு உருவாக்கம் செய்தது பற்றி கனேஷ் சொல்லும் பொழுது அவர் விழிகள் மின்னும். வாய் பிளந்து கேட்டுக்கொண்டிருப்பேன். இளையராஜா மீதான மரியாதை கூட்டல் மடங்குகளில் இருந்து பெருக்கல் மடங்குகளுக்கு மாறியது என சொல்லலாம்.

இப்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் எனது மற்றும் என் குடும்ப நண்பன் கருப்பையா ராஜா. அவர் அடிப்படையில் நல்ல ஓவியர். அவர் டைப் ரைட்டிங்க் செண்டரொன்றில் சேர்ந்து நல்ல தட்டச்சு புலமை கைவந்த பிறகு இளையராஜாவின் பிரசித்து பெற்ற உருவ ஓவியம் அப்போதைக்கு அடிக்கடி பயன்படுத்தி வந்தது. அந்த ஓவியத்தின் மூலவரை படத்தை பென்சிலால் வரைந்து கொண்டு அதனை முழுக்க முழுக்க ச ரி க ம ப த நி என்னும் சப்த ஸ்வ்ரங்களின் லிபிகளைக் கொண்டு மட்டும் அதை வரைந்து ஒரு நாள் என் வீட்டுக்கு எடுத்து வந்தார். அதை நான் விருப்ப பரிசாக கருதி பிடுங்கிக் கொண்டேன். என்னை விட வேறு யாருக்கும் அதை வைத்திருக்கும் உரிமை இருப்பதாக அப்போதைக்கு நான் கருதவே இல்லை என்பது தான் வேடிக்கை. அந்த படத்தை பிறகு சில சந்தர்ப்பங்களில் என்னை புதிதாக அறிய நேரும் நண்பர்களிடம் கூசாமல் அதை செய்தவன் நான் தான் என அறிமுகப்படுத்திக் கொண்டு காண்பிப்பேன்.

ரஹ்மானின் பிரசித்தி காலத்தில் நாட்டுப்புறப் பாட்டு, காதலுக்கு மரியாதை, ஹேராம் என இளையராஜாவின் வெரைட்டி  தொடர்ந்தது. அது போன்ற இளையராஜாவின் சூப்பர் ஹிட் அவதாரங்கள் வரும்பொழுதெல்லாம் அது தான் எனக்கும் என் வட்டத்தாருக்கும் பேச்சு சிந்தனை என எல்லாருக்குமான மனசு ரிங் டோங்களாக இருந்தன.

இளையராஜா அதற்குப் பிறகு எப்பொழுதுமே தனது இசையில் குறை வைக்கவே இல்லை. காலம் என்னையும் எனை ஒத்த என் வட்டாரத்து ரசிகர்களையும் வேண்டுமானால் பிரிக்க  முடிந்திருக்கலாம். ஆனாலும் என்னை மயக்கிய என்று சொல்ல கூடாது. அது வெறும் வார்த்தைக்கூட்டம் தான். என்னை பொருத்த வரை என்னை பலமுறை மீட்டெடுத்த மருத்துவர் இளையராஜா. இந்த இதே வாக்கியத்தை 3 வருடங்களுக்கு முன்னால் என் கடையின் கல்லாவில் அமர்ந்தபடி நான் ஒருவரிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். அப்பொழுது தனவேலன் என்ற திருநகரை சேர்ந்த புதிய நண்பரொருவர் என் கடைக்கு வந்திருந்தார். அவர் என்னுடன் பேசிக்கொண்டிருந்த எனது தோழர் புறப்பட்டுச் சென்ற பிறகு மெல்லிய குரலில் என்னிடம் கேட்டார்.
"இளையராஜாவ அவ்வளவு பிடிக்குமா..?"
"அவ்வளவு பிடிக்காது ப்ரதர். அதுக்கெல்லாம் மேல பிடிக்கும்"
"சந்தோஷமா இருக்கு ரவி...நான் அடுத்த முறை அவரை பார்க்கும் பொழுது சொல்றேன்"
":உங்களுக்கு அவர தெரியுமா..?"
நான் கேட்ட பொழுது அவர் தெரியும் என எதாவது சொல்வார் என எதிர்பார்த்தேன். அவர் அந்த வட்டாரத்தில் ஒரு பெரும்புள்ளி. அதோடு கூட ஒரு கல்லூரியின் இயக்குநரும் கூட. அவர் என்னிடம் சொன்னார் "என் மனைவியோட தம்பி தான் சபரி. பவதாரணியோட கணவர்"
எனக்கு மிக சந்தோஷமாக இருந்தது. ஏதோ இளையராஜாவே என் கடைக்கு வந்தாற்போல இறக்கை கட்டிப் பறந்தேன். இன்று வரை அவரது வீட்டுக்கு ராஜா வந்தால் எனக்கு தெரிவிக்க வேண்டும் என அவரை அன்பாக மிரட்டியிருக்கிறேன். அவர் கண்டிப்பாக ஒருநாள் சொல்வார் என இன்னமும் நம்புகிறேன்.
ஆனால் இந்த கட்டுரை இதுவரை சொல்லப்பட்டவற்றுக்காக எழுதவில்லை. எழுத வைத்த சம்பவம் மிகச்சிறியது. சென்ற வாரம் எனக்குத் தெரிந்த செல் கடையொன்றில் நின்று கொண்டிருந்தேன். சில சி.டி க்களை தேர்வு செய்து கொண்டிருந்தேன். அப்பொழுது அந்த கடைக்கு ஒரு சிறுமி அல்லது இளம் பெண் சொல்லபோனால் 14 வயது இருக்கும். வந்தவள் என் நண்பர் கடை முதலாளியிடம் "எனக்கு ஐ.பாட் ல சாங்க்ஸ் ஏத்தி தருவீங்களா..?" எனக்கேட்க, லிஸ்டை வாங்கினார். நான் மேலோட்டமாக அந்த பட்டியலை பார்த்தேன்.
எல்லாமே இளையராஜா பாடல்கள். 70களிலிருந்து நேற்று வரை கிட்டத்தட்ட 300 பாடல்கள்.
நான் கேட்டே விட்டேன் "இதெல்லாம் யார் கேட்கறதுக்கு பதியுறீங்க..?"


"எனக்கு தான்.. நான் தான் கேட்பேன்"
"இளையராஜா பிடிக்குமா ரொம்ப..?
"இளையராஜா மட்டும் தான் பிடிக்கும்"
அது தான் அது தான் இளையராஜா. ராஜா ராஜா தான்.

No comments:

Post a Comment