Pages

Monday, 7 May 2012


சென்னை விமான நிலையத்தில் மணி விடியற்காலை மூன்று. இன்னும் ஒரு மணி நேரத்தில் புறப்படவிருந்த எமிரேட்ஸ் விமானத்திற்காக காத்திருந்தார் சண்முகம். அவரது மகன் அருணிடமிருந்து அழைப்பு வந்தது.
"நான் பாத்துக்கறேன் டா... நீ ஒன்னும் கவலைப்படாத. . ஓகே... எனக்குத் தெரியாத ஊரா என்ன அது? எழுப்ப வேண்டாம் தூங்கட்டும்... அம்மாவக் கொஞ்சம் கவனமாப் பார்த்துக்கப்பா... சரி. . நான் அங்க போய் இறங்கினதும் கூப்பிடுறேன்."

தன்னுடைய ஐம்பதுகளில் இருக்கும் சண்முகம் ஒரு பன்னாட்டு பொறியியல் நிறுவனத்தின் பொது மேலாளர். பல ஆண்டுகளுக்குப் பிறகு அலுவலகப் பயணமாக வெளிநாடு கிளம்பியிருந்தார். விமானம் பறக்க ஏதுவாக ஓடுதளத்தில் காத்துக் கொண்டிருந்தது. அது மெதுவாக ஊர்ந்து செல்லத் துவங்கிய வேளை சண்முகத்தின் மனதில் நினைவுகள் இழையாக கசியத் துவங்கி கண்களில் காட்சிகளாக விரியத் தொடங்கின. நம்முடைய ஒவ்வொரு பயணத்தின் போதும் ஏற்படும் அவ்விடம் மற்றும் மனிதர்கள் சார்ந்த கடந்த கால நினைவுகளின் சுவடாகவும் வருங்காலத்தின் எதிர்பார்ப்புமாக இருப்பது போல நடுவானில் சண்முகத்தின் சிந்தையில் வந்து மறைந்து போயின.


அது ஜெர்மனியின் பான் நகரம். பான்-கொலன் நகர விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தவர் டாக்சியில் சாய்ந்தவாறு புகைப் பிடித்துக் கொண்டிருந்த ஒரு ஆப்கானியரிடம் தான் முன்பதிவு செய்த விடுதியின் முகவரியைக் காட்டினார். பான் நகரம் கடந்த இருபது ஆண்டுகளில் அந்த காலத்திற்குரிய மாற்றங்களைப் பெற்றிருந்தது. விடுதியை அடைந்ததும் வீட்டிற்கு அழைத்துப் பேசினார் சண்முகம்.

பயணக் களைப்பில் இரவு நன்கு உறங்கிய சண்முகம் காலை எழுவதற்கு முன்னே நகரம் எழுந்திருந்தது. தெருவில் சென்று கொண்டிருந்த குழந்தைகளின் கூச்சல் சண்முகத்திற்கு அவரது இருப்பிடத்தை உணர்த்தியது. ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தார். அந்த இளங் காலையில் கோடையைக் கொண்டாட காலில் சக்கரம் கட்டிய சிறுவர்களும் சிறுமிகளும் உற்சாகமாக சென்று கொண்டிருந்தனர். சிலர் ஆளுயர பட்டங்களை கைகளில் ஏந்தியவாறு சென்று கொண்டிருந்தனர். வயதான ஒரு பெரியவர் நடக்க முடியாத தன் மனைவியை வண்டியில் வைத்துத் தள்ளிக் கொண்டு மெதுவாக நடந்து கொண்டிருந்தார். மீண்டும் கட்டிலில் விழுந்தவர் தனக்குள் பேசத் துவங்கினார்.

"இருபது வருடங்களுக்கு முன்பு பான் நகரின் இதைப் போன்ற மற்றொரு வீதியின் ஒரு வீட்டில் தான் தினமும் துயில் கொண்டு எழுந்தேன். உயர்கல்வி மற்றும் வேலைக்காக என்னுடைய இருபது வயதில் இந்தியாவை விட்டுப் புறப்பட்டு வந்த நான் கிட்டத்தட்ட எட்டு வருடங்களை இந்த பான் நகரில் தான் கழித்தேன். பீத்தோவன் தன்னுடைய இருபதுகளில் ஓடித் திரிந்து விளையாடிய அதே வீதிகளில் அப்பொழுது நானும் நடந்து திரிந்திருக்கிறேன். அப்படிப்பட்ட ஒரு வீதியில் தான் அன்று சகானாவைச் சந்தித்தேன். அது புறநகரில் ரைன் பாஹிற்கு முன்னால் அமைந்த ஒரு சிறிய கிராமம். விடுமுறை நாளான அன்று மைதானத்தில் நண்பர்களுடன் கால் பந்தாடிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். அந்த கிராமத்தின் ஆள் இல்லாத ஒரு தெருவில் சைக்கிளில் மணி அடித்துக் கொண்டே சென்று கொண்டிருந்தாள் சகானா. அடர் கரு நிற சுருள் முடி,கரு நிற ஸ்வெட்டர்,கரு மைப் பூசிய கரு விழியென வசீகரமான ஒரு தமிழச்சியின் தோற்றத்துடன் அந்த வெள்ளை வீதியில் சகானா என்னைக் கடந்து சென்றாள். இல்லை நான் தான் அவளைக் கடந்து நடந்து கொண்டிருந்தேன். சற்று நேரம் அவள் எனக்கு எதிர் திசையில் என்னுடனேயே பயணித்துக் கொண்டிருந்தாள். அந்த முகம் என் மனதிலிருந்து அகல ஒரு சில நாட்கள் ஆயின. 
நாட்கள் நகர்ந்தன. சைக்கிளில் பயணிப்போர் எல்லாம் என் கவனத்தில் வந்தனர். பிறிதொரு நாளில் எதிர்பாராமல் அது நடந்தது. தெருவின் ஒரு முனையில் நான் நடந்து கொண்டிருக்கையில் சகானா தொலைவே மறுமுனையில் சென்று திரும்பினாள். அவளது சைக்கிளின் பின் புறக் கரியரில் ஒரு நாய்க் குட்டி மிக நேர்த்தியாக சம்மணமிட்டு அமர்ந்திருந்தது. என் கால்கள் என்னை அறியாமல் பரபரத்தன. எல்லோரும் பார்க்க தெருவில் அப்படி நான் ஓடியதில்லை. அவள் சென்று திரும்பிய தெருவான சீகர் ஸ்ட்ராசே எனக்காக எதையோ ஒளித்து வைத்திருப்பதைப் போன்ற உள்ளுணர்வுடன் சென்று திரும்பினேன். ஆம்... சகானா... சைக்கிளை நிறுத்திவிட்டு பின் பக்க சக்கரத்தில் எதோ செய்து கொண்டிருந்தாள். என்னுடைய நடையின் வேகம் முற்றிலுமாக குறைந்தது. சகானாவின் ஒரு பக்கத்தைப் படித்துவிட்டுக் கடந்தேன். அவள் தலையை நிமிர்த்தவில்லை. மறுபக்கத்தை படிக்கத் திரும்பினேன். தொலைவிலும் அருகிலும் ஒரே பொலிவுடன் காட்சி அளிக்கும் அற்புத ஓவியமாகத் தெரிந்தாள் சகானா. 
'Darf Ich Ihnen helfen?' நானறியாமல் திடீரென ஜெர்மன் வந்தது எனக்கு.
நிமிர்ந்து பார்த்தவள் எனது தோற்றத்திற்கும் பேசிய மொழிக்கும் இருந்த முரண்பாட்டால் சற்று அதிசயித்தாள் . 
சற்று சுதாரித்தவள் 'Keine Problem'. . Danke! என சுருக்கமாக முடித்துக் கொண்டாள். 
எனக்கு அடுத்து என்ன செய்வதென்று புரியவில்லை. நல்ல வேளையாக அவளது சைக்கிள் எனக்கு உதவியது. செயின் நன்றாக சிக்கிக் கொண்டிருந்தது.
என்னை ஒரு முறை நிமிர்ந்து பார்த்தாள். நான் அவ்விடத்தை விட்டு கொஞ்சம் கூட நகரவில்லை. என்னருகில் வந்து மோப்பம் பிடித்த அவளது நாய்க் குட்டி என்னைக் கிளம்பு என்பதைப் போல பார்த்தது. 
'ஆலிஸ் இங்க வா... ' என செல்லமாக கடிந்து கொண்டாள் அந்த நாய்க் குட்டியை. 
"ஹலோ நீங்க தமிழ் ஆ?"

ஆம். . என்று லேசாக சிரித்தாள். 
அதற்குப் பிறகு நானும் பேசினேன் அவளும் பேசினாள். ஆனால் நான் கேட்ட கேள்விகள் எதற்கும் அவள் பதில் கூறவில்லை. அவள் பெயரைத் தவிர. ஆனால் அவள் பேசினாள். அவளது சாமார்த்தியத்தை நான் ரசித்தேனே தவிர வெறுக்கவில்லை. வேண்டுமென்றே ஒரு அவசரத்தை விதைத்துக் கொண்டு சைக்கிளைத் தள்ளிக் கொண்டு நடந்தாள் சகானா. 
விளையாட்டில் ஆர்வம் கூடிப் போனது எனக்கு. வாரக் கடைசியில் மட்டும் விளையாடிக் கொண்டிருந்த நான் பின்பு வார நாட்களிலும் விளையாடத் துவங்கினேன். ஒரு நம்பிக்கையில்! முதல் வாரம் எனக்கு சாதகமாக அமையவில்லை. மற்றொரு நாளில் அது நடந்தது. 
சகானா சாலையில் எதிர்பட்டாள். "ஹாய். . " என்று என்னைப் பார்த்து லேசாக நகைத்தவள் சைக்கிளை நிறுத்தினாள். அவள் அன்று அப்படிப் பேசுவாள் என்று நான் சிறிதும் எதிர் பார்க்கவே இல்லை. இருவரும் அந்த அறிமுக உரையாடலில் எங்களது பூர்வீகத்தை பின்புலங்களை கல்வியைப் பேசிக் கொண்டே நடந்தோம். 
சகானா அப்பொழுது பள்ளிக் கல்வியை முடித்து பியானோவும் பரதமும் கற்று வந்தாள். அவளது அண்ணன்கள் இருவரும் கொலன் நகரில் வேலை பார்க்க
சகானா தனக்காக அவளது பெற்றோர்கள் கட்டிய வீட்டில் அவர்களுடன் வசித்து வந்தாள். சகானாவின் அப்பா ஒரு கை வினைக் கலைஞர். கண்ணாடியாலான அழகுப் பொருட்களைச் செய்வது அவரது தொழில் எனத் தெரிவித்தாள். முப்பதாம் எண் பொறிக்கப்பட்ட கதவுக்கு முன்னே சைக்கிளை நிறுத்தியவள் என்னை உள்ளே வருமாறு அழைத்தாள். அடுத்த மூன்று மாதங்களில் சகானா என்னை அவளது இயல்பான நண்பனாக ஏற்றுக் கொண்டிருந்தாள். இப்படியாக எங்கள் நட்பு இனிதாக தொடர்ந்தது. 
ஒரு நாள் தைப் பூசத்தன்று என்னை வீட்டிற்கு அழைத்திருந்தாள் சகானா. தன்னுடைய பெற்றோரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தாள். அவளுக்கென பிரமாண்டமாக அமைந்த தனியறையில் இருந்த பியானோவை எனக்கு வாசித்துக் காட்டினாள். வீட்டிற்குப் பின்னே அவள் வளர்த்து வரும் ஆப்பிள் தோட்டத்திற்கு என்னை அழைத்துச் சென்றாள். இருவரும் ஆப்பிள் பறித்துச் சாப்பிட்டுக் கொண்டே நெடு நேரம் இளைய ராஜாவையும் ரகுமானையும் பற்றி பேசிக் கொண்டிருந்தோம்.
அன்று சகானா என்னுடன் இருக்கும் பொழுதுகளே அவளுடைய இனிய பொழுதுகள் என என்னிடம் தெரிவித்தாள். நானும் அதை அவள் கண்களைப் பார்த்து அறிந்து கொண்டேன். அந்த நொடியில் எங்களுக்குள் ஏற்பட்ட ஒரு பதட்டம் எனக்கு ஆயிரம் கதைகள் சொல்லின.
அன்றிரவு அங்கிருந்து திரும்பிய நான் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. ஒரு புள்ளியாக எங்கேயோ என்னுள் தொடக்கி தென்பட்டுக் கொண்டிருந்த சகானா என்னுள் முழுமையாக் நிறையத் துவங்கினாள். 


என்னுள் திடீர் காளான் என பல கேள்விகள் முளைத்தன
திடீரென மனதளவில் ஒரு பாதுகாப்பின்மையை நான் உணரத் தொடங்கினேன். 
"சகானா வேறு நகரத்திற்குச் சென்றுவிட்டால்?"
"அல்லது நான் இந்தியாவிற்குச் சென்று விட்டால்?"
"சென்றால் என்ன?... . "
இல்லை... இது அபத்தம்.
அவளை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
பிடித்தால் என்ன செய்யப் போகிறாய்?
டேய்... . இது தேவையா இப்போ?
நான் சகானாவைக் காதலிக்கிறேனா?
ஏன் கூடாது. . ?
நானே எனக்குள் கேள்விகளையும் எதிர் கேள்விகளையும் கேட்கத் துவங்கினேன். இந்த திடீர் மனநிலை சகானவிடம் இது பற்றி பேச வேண்டும் என்ற ஆசையையும் ஆர்வத்தையும் தூண்டியதோடு என் தூக்கத்தையும் கெடுத்தது. இருத்தும் அதற்கான சூழல் அவ்வளவு எளிதில் எனக்கு வாய்க்கவில்லை. 
காலச் சக்கரம் சுழற்றி வீசிய வீச்சில் நானும் சகானாவும் வெவ்வேறு நிலப் பரப்பில் சென்று விழுந்தோம். சகானா உயர் கல்விக்காக பிரிட்டனுக்குச் சென்றுவிட்டாள். அவள் இல்லாத ரைன்பாஹின் வீதிகள் எனக்கு வெகு விகாரமாக காட்சி அளித்தன. அவள் சென்ற ஓராண்டில் நானும் இந்தியா திரும்பும் சூழலுக்கு தள்ளப்பட்டேன். 
வாழ்வில் என் மீது நானே அதிருப்தி கொண்டிருந்த வேளை விமலா வந்து எனக்கு புத்துயிர் கொடுத்தாள். வாழ்க்கையை எனக்கு விரல் பிடித்துச் சொல்லிக் கொடுத்தாள். அருணை என் கையில் கொடுத்து என் உலகத்தையே மாற்றிப் போட்டாள் விமலா.
சர்ச்சில் மணி ஒலித்தது. காட்சி களைந்து கண்களைத் துடைத்துக் கொண்டு எழுந்தார் சண்முகம். காலைக் கடன்களை முடித்து கீழே வந்தார். சூடான காப்பியுடன் மஷின் காத்துக் கொண்டிருந்தது. சண்முகம் கேட்டுக் கொண்டதற்கு இணங்க விடுதியின் ஊழியர் ஒரு சைக்கிளை ஏற்படுத்திக் கொடுத்தார். நகர வரைபடம் ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு தன் சைக்கிள் பயணத்தை துவங்கினார் சண்முகம். 
கட்டிடங்கள் உயர்ந்திருந்தன. சாலைகள் விரிந்திருந்தன. நகரமே கண்ணாடியால் மூடப் பட்டதைப் போன்ற ஒரு உணர்வு ஏற்பட்டது சண்முகத்திற்கு. ஒவ்வொரு வீதிக்குள்ளும் தன்னுள் பற்றிக் கொண்ட பரவசத்துடன் நுழைந்தார். முதல் நாளில் சிட்டி சென்டர் முதல் அவர் புழங்கிய தெருக்களின் வழியே நகரத்தைச் சுற்றினார் சண்முகம். 
மறுநாள் சண்முகத்தின் மனதில் முழுவதுமாக சகானா வந்து நிழலாக நின்றாள். சண்முகத்திடம் அப்பொழுது முதல் ஒரு பதட்டம் தொற்றிக் கொண்டது. அன்று முழு நாளையும் பீதோவன் ஹாஸ் மியூசியத்தில் செலவிட எண்ணி இருந்தார். மியூசியத்தைச் சுற்றி வந்தவர் அன்றைய தினம் பீதோவன் ஹாஸ் சேம்பர் ஹாலில் நடைபெற்ற சிறப்புக் கச்சேரியில் சென்று அமர்ந்தார். இருந்தும் முழுமையாக தன்னைச் செலுத்த முடியாமல் தவித்தார். பீதோவனையும் மீறி சகானா சண்முகத்தின் உள்ளே மெல்லிதாக பியானோவை வாசித்துக் கொண்டிருந்தார். ஒரு தீர்க்கமான முடிவுடன் கச்சேரியின் பாதியிலே கிளம்பினார் சண்முகம். 
அந்த மாலையில் ரைன்பாஹில் சகானாவின் வீடு அமைந்த சீகர் ஸ்ட்ராசெயில் சென்று திரும்பும் போது சண்முகத்தின் இதயத் துடிப்பு மேளமாக கொட்டியது. படபடப்புடன் நடந்தவரின் கண்கள் முப்பதாம் எண் பொறிக்கப்பட்ட வீட்டைத் தேடின. சகானா ரஜீவன் என்ற பெயர் அஞ்சல் பெட்டியில் பெரிதாகத் தென்பட்டது. நொடியில் என்ன செய்வதென்று குழம்பிய சண்முகம் சகானா வீட்டுக்கு எதிரே புதிதாக முளைத்திருந்த நூலகத்திற்குள் நுழைந்தார். 
அனுமதி மறுக்கப்பட எதோ சில காரணங்களைச் சொல்லி கடவுச் சீட்டையும் காட்டி கருணை அடிப்படையில் உள்ளே நுழைந்தார் சண்முகம். அவசரமாக எதோ ஒரு நூலை எடுத்துக் கொண்டு ஜன்னலின் அருகே சென்று அமர்ந்தார். ஜெர்மன் மொழியில் இருந்த அந்த நூலின் அட்டைப் படத்தில் ஒருவன் ஜன்னலின் வழியே ஒரு குருவிக் கூட்டைப் பார்த்துக் கொண்டிருந்தான். இன்னும் ஒரு மணி நேரத்தில் நூலகம் மூடப் படுவதாக ஒரு பெண்மணி வந்து அறிவித்து விட்டுச் சென்றாள். சண்முகத்திற்கு லேசாக வியர்க்க ஆரம்பித்தது. சற்று நேரத்தில் சாலையில் வெளியே காரை விட்டு மூவர் இறங்கினர். அது சகானாவும் அவளது குடும்பமும் தான். 
"என் சகானாவா அது. . இருபது வருடங்களுக்கு முன்பு பார்த்த அதே தோற்றத்தில் இருந்தாள். அது எப்படி சாத்தியம்... அது சகானாவின் மகளாக இருக்க வேண்டும். அம்மாவிடம் அந்த மூக்கை அப்படியே கேட்டு வாங்கியிருக்கிறாள். அவள் பின்னே அதே புன்னகை மாறாமல் லேசான கருப்பு வெள்ளை முடியுடன் சகானா. .
கூடச் செல்பவர் அவளது கணவராகவே இருக்க வேண்டும். என்னைவிட அவருக்கு வழுக்கை சற்று குறைவாகவே உள்ளது" என சகானாவின் குடும்பத்தை தொலைவிருந்தே கண்டு மகிழ்ந்தார் சண்முகம்.
மூவரும் உள்ளே சென்றனர்.


சிறிது நேரம் கழித்து லேசாக இருட்டத் தொடங்கிய வேளை பெண் ஒருத்தி சைக்கிளில் மணியடித்துக் கொண்டே மெதுவாக வந்தாள். சட்டென ஓரிடத்தில் தானாகவே நிறுத்தியவள் கீழே குனிந்து அமர்ந்தாள். பின்பு சாலையின் இருபுறமும் யாரையோ ஆவலுடன் தேடினாள். யாருக்காகவோ அவள் காத்திருப்பதைப் போலத் தெரிந்தது. ஆலிசைப் போல ஒரு நாய் அவளைச் சுற்றிச் சுற்றி வந்தது. சண்முகத்தின் கால்கள் துடித்தன. கைகள் பரபரத்தன. கண்களை மூடி நாற்காலியை இறுகப் பற்றிக் கொண்டார் சண்முகம். பின்பு சற்று நேரத்தில் இருளில் அந்த உருவம் சைக்கிளை மெதுவாக தள்ளிக் கொண்டு எதிரே உள்ள முப்பதாம் எண் வீட்டுக் கதவைத் திறந்து கொண்டு நுழைந்தது.
சண்முகம் தன் கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீரைத் துடைத்தபடி தன் மனைவி விமலாவிடமிருந்து வந்த அழைப்பை ஏற்று பேசத் துவங்கினார்.

No comments:

Post a Comment