Pages

Monday, 7 May 2012


உதிரிகள் இறுதியாக தஞ்சம் அடையும் இடமாக அரசியல் இருந்த நிலை மாறி, அரசியல் உதிரிகளை உருவாக்குகிற நிலை உருவாகி விட்டது என்கிற உண்மையை உரக்கச் சொல்லும் படம் பச்சை (எ) காத்து. வர்க்கப் போராளிகளும், சாதி ஒழிப்பு வீரர்களும், மொழிப்போர் தியாகிகளும் அரசியல் நடத்திய காலம் போய், பிரியாணிக்காக கொடி பிடிப்பவனும், மதுவிற்காக, கொலை செய்பவனையும் கொண்டுள்ள அமைப்பாக இன்றைய அரசியல் கட்சிகள் உருமாறியுள்ளன. இயல்பாகவே ‘உதிரி’யான மனநிலை கொண்ட இளைஞர்களின் புகலிடம் அரசியல்தான் என்பது இன்றைய கேடுகெட்ட அரசியலின் அடையாளமாக மாறியுள்ளது. இன்றைய அரசியலின் மக்கள் விரோத போக்கையும், உதிரியாக்கப்பட்ட இளைஞனின் வாழ்க்கை முறையையும் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் படமாக்கியுள்ளார் இயக்குனர்.
pachaiengirakathu_400

பொதுவாழ்விற்கு வருபவன் 50 பைசா சம்பாதித்தால் 25 பைசா குடும்பத்திற்கு கொடுத்து விட்டு மீதி 25 பைசாவை கட்சிக்குக் கொடு என்றார் பெரியார். “குடும்பம்” என்கிற அமைப்பு சமூக சிந்தனையிலிருந்து ஒரு மனிதனை பிரித்து விடும் நிறுவனமய அமைப்பு என்று பெரியார் விமர்சித்தார். ஆனால் பொது வாழ்க்கை என்கிற பேரில் குடும்பம், சமூகம் இரண்டிற்கும் அடங்காத “உதிரி” (lumpen) வாழ்க்கையை பெரியார் என்றுமே ஏற்றுக் கொண்டதில்லை. பூர்ஷ்வா வர்க்கத்தை விட ஆபத்தான வர்க்கம் உதிரி பட்டாளி வர்க்கம் (lumpen proliterian) என்கிற உண்மையை காரல் மார்க்சும் பதிவு செய்கிறார். நமது நாயகன் “பச்சை” என்கிற கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். முக அமைப்பு, உடல்மொழி, பேசும் பாவனை, வசன உச்சரிப்பு என தென் மாவட்ட கிராமங்களில் வாழும் மைந்தர்களை கண்முன் நிறுத்துகிறார்.
வெட்டிப்பேச்சும், வீராப்பும் அரசியலின் “மூலதனம்” என்று பள்ளி பருவத்தில் உணரும் “பச்சை” அதே இயல்புடன் வாழ்ந்து தன் வாழ்வை அழித்துக்கொள்வதை நேர்த்தியாக படம் பிடித்திருக்கிறார் இயக்குனர் கீரா. பாசத்தைக் கூட முரட்டுத்தனமாக காண்பிக்கும் பச்சையின் பரிதாப முடிவு பல்வேறு கிராமங்களில் நிதர்சனமாக இருப்பது கண்கூடு. படத்தில் வரும் பாடல் வரிகள் அனைத்தும் எளிய மக்களின் வாழ்வியலை மண்வாசனையுடன் சுவாசிக்கச் செய்கிறது. வடக்கத்திய, மேற்கத்திய தாக்கங்களை உடைத்தெறிந்த, திறமையான, அழகான தமிழ்ப் பெண் கதையின் நாயகி என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.
பாடல்களின் ஊடாகவும், வசனங்களின் வாயிலாகவும் ஆங்காங்கே ஈழப்பிரச்சனை பேசப்படுகிறது. இளைஞர்களின் “உதிரி” தன்மையை சந்தையாக்கி கதாநாயக துதியுடன் வெற்றி பெறும் வணிக ரீதியான திரைப்படங்களுக்கு மத்தியில் இயக்குனர் கீரா, நமது இளைஞர்களுக்கு பாடம் நடத்தியிருக்கிறார் என்றே சொல்லலாம். எடுத்துக் கொண்ட கதைக்களம் சமூக ஆர்வம், தமிழ் உணர்வு என அனைத்தும் தமிழ்த் திரை உலகம் கைக்கொள்ள வேண்டியவை. தமிழனை நுகர்பொருளாக பாவிக்கும் தமிழ்த்திரையில் தமிழனின் முக்கிய பிரச்சனையை கருவாகக் கொண்டு வெளி வந்திருக்கிறது பச்சை (எ) காத்து.


Pachai-Engira-Kaathu_630
“பச்சை” தமிழகத்தின் ஏதோ மூலையில் வாழ்ந்து மறைந்த கதாபாத்திரம் அல்ல. தமிழகத்தின் மூலை முடுக்குகளிலெல்லாம் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் “உதிரி”களின் அடையாளம் என்பதை தமிழ்ச் சமூகம் புரிந்து கொள்ள வேண்டும். படத்தில் இவ்வளவு செய்திகள் இருந்தாலும், வணிக ரீதியாக இரண்டரை மணி நேரம் பார்வையாளர்களைக் கட்டிப்போடுகிறது என்பது படத்தின் மிகப்பெரிய பலம். மீண்டும் “பெரியாரின் சிந்தனைகள் முகிழ்த்தெழ வேண்டியதின் அவசியத்தையும், சுயமரியாதை உணர்வை தூண்டக்கூடிய ஒரு அமைப்பின் கட்டாயத்தையும், அர்ப்பணிப்பு சிந்தனை கொண்ட இளைஞர்களின் தேவையையும் இத்திரைப்படம் உணர்த்துகிறது.

No comments:

Post a Comment